May 19, 2017

ராதாதெருவில் சில பெண்கள் இருப்பார்கள். அவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் கண்களுக்கு மிகச் சாதாரணமாகத் தெரிவார்கள். ஸ்கூல் யூனிபார்ம் போட்டு ரெட்டைச்சடையில் பார்க்கும் போது மனதில் எந்த பட்டாம்பூச்சியும் பறக்காது. ஆனாலும் அவர்கள் செட்டில் சில பையன்களுக்கு அவள்தான் உலக அழகியாய் இருப்பாள். அதுபோலத்தான் அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதவைப் பார்த்தபோது பெரிய அழகி என்ற எண்ணம் ஏற்படவில்லை.பெரும்பாலான காட்சிகளில் டல் மேக்கப்புடன் தான் இருந்தார். இந்தப் படம் எங்கள் ஊருக்கு முத்துராமன் மகன் நடிச்ச படமாம் என்ற அறிமுகத்துடனேயே வந்தது. பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தன. முக்கியமாகவாடி என் கப்பக்கிழங்கேபாடல் மாணவர்களின் பேவரைட்டான ஈவ் டீசிங் பாடலாக மாறியிருந்தது. முந்தைய தலைமுறையில் மெல்ல நட மெல்ல நட, தெரு அண்ணன்களுக்கு ஓரம்போ ஒரம்போ மற்றும் சுராங்கனி என்றால் எங்கள் செட்டிற்கு வாடி என் கப்பக்கிழங்கே. தொடர்ந்து சிக்ஸர்களாக அடித்துக்கொண்டிருக்கும் ஒரு பேட்ஸ்மென்னின் இன்னொரு சிக்ஸரையும் மக்கள் சாதாரணமாக கடந்து போவதுபோல இளையராஜாவின் சிறப்பான அலைகள் ஓய்வதில்லை பாடல்களையும் அதிகம் சிலாகிக்காமல் எங்கள் ஊர் கடந்து சென்றது. ஆனால் வாடி என் கப்பக் கிழங்கே மட்டும் பள்ளி மாணவர்களிடம் தங்கிவிட்டது. பள்ளி செல்லும் குமரியின் இயல்பான எழிலுடன் இருந்த ராதாவும்.

இந்தப் பாடலை எழுதியவர் கங்கை அமரன். கேரளாவின் ஸ்பெஷல்களில் ஒன்று கப்பக்கிழங்கு. ராதா கேரளாவில் இருந்து வந்ததால் அவரை வரவேற்கும் விதமாக எழுதினேன் என்றார்.  கிழங்காட்டம் இருக்கு என்று ஊர்ப்பக்கம் சொல்வார்கள், அதன் பொருள் கின்ணென்று உறுதியாக அதிகப்படியாக தொள தொளவென  சதை இல்லாமல் இருக்கும் பெண் என்று அர்த்தம். ராதாவும் அந்தப் படத்தில் அப்படித்தான் இருந்தார். மாநிறம் தான். ஆனால் தமிழர்களுக்கு மிகவும் பிடித்த மாநிறம்.
பத்தாம் வகுப்பில் சுமாராகத் தெரிந்த பெண்களே பிளஸ் டூ சமயத்தில் சற்று எழில் கூடித் தெரிவார்கள். அது தெருவில் திடீரென அதிகரிக்கும் அடுத்த தெருப் பையன்களின் சைக்கிள் மூலமே அது நமக்கு அறியவரும். யாருக்குடா இங்க வந்து இவிங்க டாப் அடிக்கிறாங்க? என்ற கேள்விக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பெண்ணை சுட்டிக்காட்ட அதுக்காடா? என்று குழப்பத்துடன் நடையைக் கட்டுவோம். அப்படி நடிக்க வந்த ஒராண்டிலேயே எழில்கூடி இளஞ்ஜோடிகள், கோபுரங்கள் சாய்வதில்லை, காதல் ஓவியம் என ஏராளமான இளைஞர்களை கவர்ந்தார்.  அந்தப் பெண்களே கல்லூரியில் படிக்கும் போது எழிலுடன் சற்று ஒயிலும் கூடும். நடை,உடை,பாவனைகள் மெருகேறும். அந்த ஒயில் அவருக்கு தூங்காதே தம்பி தூங்காதே, பாயும்புலியில் வாய்த்தது. அந்த ஒயிலில் ஒரு கூட்டம் மயங்கியது

தெருவில் பள்ளி யூனிபார்ம், கல்லூரியில் படிக்கும் போது கன்வென்ஷனல் சுடிதாரிலேயே கண்கள் பார்த்து பழகிய பெண்ணுக்கு திடீரென கல்யாணம் என்பார்கள், வேண்டா வெறுப்பாய் அம்மாவை அழைத்துக் கொண்டு போகும் டூட்டியால் மண்டபத்திற்குப் போனால் மிதமாய் எடை கூடி, பளபளப்பு வலுவாகவே கூடி அந்தப் பெண் சேலையில் தேவதை போல் மணமேடை ஏறுவாள். அடடா மிஸ் பன்ணிட்டோமே எனத்தோன்றும். அதே போல் அழகுடன் ஆனந்த் படத்தில் இருப்பார். சி வி ராஜேந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் ராதா சேலையில்  வரும் காட்சிகள் எல்லாம் ஒரு தேர்ந்த ஓவியர் தன்னை மிகவும் கவர்ந்த பெண்ணை தன் வாழ்நாள் முழுவதும் செலவழித்து வரைந்த ஓவியமாகவே தோன்றும். எங்கள் ஊர் திருவிழாவின் போது தியேட்டர்களில் நடுநிசிக் காட்சியாக அந்த ஆண்டில் ஓடிய மிகப்பெரும் வெற்றிப்படத்தை மீண்டும் திரையிடும் வழக்கம் இருந்தது. ஆனந்த் ஒரு தோல்விப்படம். ஆனாலும் அந்த திரைப்படத்தை அந்த ஆண்டு ஒரு முக்கிய தியேட்டரில் வெளியிட்டார்கள். காரணம் அந்த தியேட்டர் ஓனர் ராதா ரசிகர். பிரபு ஹீரோவாக நடித்த அந்தப்படத்திற்கு வந்த இளைஞர் கூட்டத்தைக் கண்டுசங்கிலிபிரபு ரசிகர் மன்ற நிர்வாகியே மிரண்டு போனார்.   

திருமணம் முடிந்து முதல் வருடம் ஊர் திருவிழாவிற்கு வரும் பெண்கள் இன்னும் மெருகேறி இருப்பார்கள். கொஞ்சம் நாணம் குறைந்து வீதிகளில் வலம் வருவார்கள். மாலை வேளைகளில் சர்வ அலங்காரத்துடன் தம்பி, தங்கைகள் உடன்வர திருவிழா கடைகளை அலசுவார்கள், அத்தகைய தோற்றத்தில் ராதா இருந்தது எங்க சின்ன ராசா படத்தில்.
எங்க சின்ன ராசா என்றதுமே பழனி அண்ணன் தான் நினைவுக்கு வருவார். அதிதீவிர திமுககாரர். எங்கள் வார்டின் பூத் ஏஜெண்ட். பாக்யராஜ் அதிமுக அனுதாபி என்பதால் பாக்யராஜின் படங்களைப் பார்ப்பதை தவிர்ப்பார்.  என்னய்யா இவன் மிமின்னு பேசிக்கிட்டு இருக்கான் என்பார். அப்போது டி ராஜேந்தர் திமுக அனுதாபி என்பதால் அவரின் படமான உறவைக் காத்த கிளியை கூட நாலைந்து முறை பார்த்தவர். பாக்யராஜ் பட  போஸ்டரை பார்ப்பது கூட கட்சிக்கு விரோதமான அணுகுமுறை என்ற கருத்தியல் கொண்டவர். அவரை அசைத்துப் பார்த்தது ராதா தான். வழக்கம் போல பாக்யராஜின் போஸ்டர் என்று தலையை திருப்பி புறமுகம் காட்ட முயன்றவரின் கண்ணில் ஒரு மின்னல் போல ராதாவின் அதிலட்சண முகம் படர பாக்யராஜ் படமாக இருந்தாலும் பரவாயில்லை என பார்க்கத் துணிந்தார். கொண்டைச் சேவல் கூவும் நேரம் என்ற பாட்டில் மயிலை ஒத்த அசைவுகளுடன் ராதா ஆட கிறங்கிப் போனார். படத்தை தியேட்டரில் இருந்து தூக்கும் வரை தினமும் அவர் படத்துக்கு போனதை வைத்து எங்கே அவர் அதிமுகவிற்கு மாறிவிடுவாரோ என்ற பயம் கட்சிக்காரர்களுக்கே வந்தது

தொடர்ந்து வந்த சில ஆண்டுகள் அந்த தோற்றத்திலேயே தமிழக ரசிகனுக்கு அருள் பாலித்தாள் அந்த அழகு தேவதை. உழவன் மகன், அம்மன் கோயில் கிழக்காலே, காதல் பரிசு, ஜல்லிக்கட்டு, அண்ணா நகர் முதல் தெரு, பிக்பாக்கெட், ராஜாதி ராஜா எல்லாம் ராதா உச்சக்கட்ட அழகோடு இருந்த காலத்தில் வெளியான படங்கள்

ஒரு விஷயத்தில் ஒரு மனத்தடை இருந்தால் அதை இன்னொருவர் செய்யும் போது அது விலகும். இது உடை விஷயத்தில் மிகப்பொருந்தும். எங்கள் ஏரியா திருமணங்களில் முதல்நாள் மணமகனுக்கு பேண்ட்,சர்ட் முகூர்த்த நேரத்தில் வேட்டி, தாலி கட்டி முடித்து  பரிசுப் பொருட்கள் (மொய் கவர் தான்) வாங்கும் போது கோட் சூட் என்பது வழக்கம். மென்பொருள் நிறுவனங்களில் ஊர்க்காரர்கள் வேலைக்குப் போக ஆரம்பித்த பின்னர் அங்கு நடக்கும் திருமணங்களில் ஷெர்வாணி, குர்தா, ஆப் பிளேசர்  என வெரைட்டியாக மணமகன் ஆடை அணிவதைப் பார்த்து ஆசை கொண்டனர். ஆனால் அதைப் போட்டுவந்தால் என்னடா குடுகுடுப்பைக்காரன் மாதிரி இருக்கே என கலாய்த்து விடுவார்களோ என பயந்து ஆசையை அடக்கிக் கொண்டனர். வசதியான அத்தை, தனக்குப் பெண் கொடுக்காததால் வீம்புக்கு நிறைய செலவு செய்து கல்யாணம் செய்த மேலத்தெரு ரமேஷ் செலவோடு செலவாக ஒரு ஷெர்வாணியையும் இறக்கினார். நல்லாத்தான இருக்கு என அதை சமூகம் ஏற்றுக்கொண்டது. இப்போது முதல் நாள் நிச்சயதார்த்தத்துக்கு ஷெர்வாணி என்பது சம்பிரதாய உடை அளவிற்குப் போய்விட்டது.
அதுபோலத்தான் இந்த சுடிதாரையும் அணிய தமிழகத்துப் பெண்கள் தயக்கம் காட்டி வந்தனர். காதலிக்க நேரமில்லை காஞ்சனா முதற்கொண்டு, ஜெயலலிதா ஏன் ஸ்ரீதேவி வரை சல்வார் கம்மீஸில் வலம் வந்தாலும் பெரும்பாலான தமிழ்ப்பெண்கள் சுடிதார் அணிய தயக்கம் காட்டினர். பப் கை வைத்த ஜாக்கெட், பன் கொண்டை என நடிகைகளிடம் இருந்து பல பேஷன்களை ஏற்றுக்கொண்டவர்கள் சுடிதார் விஷயத்தில் மட்டும் தயக்கம் காட்டிக்கொண்டே இருந்தார்கள். ராதா இதயகோவில், அண்ணா நகர் முதல் தெருவில் அணிந்த சுடிதார்கள் பாந்தமாக இருப்பதைப் பார்த்து பலரும் முயற்சி செய்தார்கள். தமிழ் பெண்களின் சுடிதார் மீதான மனத்தடையை நீக்கியதில் ராதாவுக்கும் ஒரு பங்குண்டு.

சிவாஜி கணேசன், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய்காந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன், பாக்யராஜ், டி ராஜேந்தர் என அனைத்து முண்ணனி நாயகர்களுடனும் ராதா நடித்தார். ஏன் எஸ் பி பாலசுப்பிரமணியம், நிழல்கள் ரவியுடனும் நாயகியாக நடித்தார். யாருடன் அவர் நடித்தாலும் வித்தியாசமாகத் தெரியவில்லை. எந்த நாயகருடன் இணையாக நடித்தாலும் பொருந்திப்போகும் உயரம்,உடல் அமைப்பு மட்டுமில்லாமல் நடிப்பும் இருந்ததால் எல்லோருடனும் ஈடுகொடுத்து நடித்தார்.

கனவுக்கன்னி என்பது மாஸ் ஹீரோவுக்கு இணையான ஒரு பதம். பெரும்பாலான ஆண்களுக்குப் பிடிக்கவேண்டும். ஸ்ரீதேவிக்குப் பின் அந்த கனவுக்கன்னி அந்தஸ்து ராதாவுக்கு வந்தது. அப்போது மாதவி போட்டியில் இருந்தாலும் அவரை மீறி பலரின் மனங்களில் இடம்பிடித்தார் ராதா. அடுத்து ராதாவின் சகோதரி அம்பிகா, ரேவதி, நதியா என மக்களுக்குப் பிடித்த நடிகைகள் வந்துகொண்டேயிருந்தாலும் கனவுக்கன்னியாக ராதாவே நிலைபெற்றிருந்தார். தர்மத்தின் தலைவனில் அறிமுகமாயிருந்தாலும் வருஷம் 16 மூலமாகவே அந்த கனவுக்கன்னி அந்தஸ்து குஷ்பூவுக்கு இடம்மாறியது

நம்மை ஒருமுறையாவது பார்ப்பாளா என்று நாம் பார்த்து ஏங்கிய பெண் மிகச் சுமாரான அழகுடையவனை திருமணம் செய்துகொண்டால் ஒரு மென்சோகம் நம்மைத்தாக்குமே அதுபோலவே 90கள் ஆரம்பித்த உடன் ராதா, டி ராஜேந்தர், எஸ் பி பாலசுப்பிரமணியம் இவர்களுடன் நடிக்க ஆரம்பித்ததும் ராதா ரசிகர்களுக்கு ஏற்பட்டது. மனைவி ஒரு மாணிக்கம் படத்தில் மலையாள நடிகர் முகேஷின் ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் அர்ஜூன் இருந்தும்

இந்த சமயத்தில் குஷ்பு, ரூபிணி, கௌதமி, பானுபிரியா போன்றோர் தமிழக இளைஞர்களின் மனங்களை ஆக்ரமிக்கத் தொடங்கினார்கள். 91ல் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜசேகரன் நாயரை ராதா திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்தி வந்தது. அதன்பின்னர் ராதா பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒருதலையாய் காதலித்த பெண் திருமணம் செய்து கொண்டு தூரதேசம் சென்றதைப் போலவே பல ராதா ரசிகர்களும் இந்நிகழ்வை எடுத்துக்கொண்டார்கள்

பின் ராதா மகள்கள் கார்த்திகா, துளசி நடிக்க வந்தபோது கூட யாரோ எவரோ என்றே பல ராதா ரசிகர்களும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் நடுவராக ராதா இப்போது இருக்கிறார் என்ற செய்திகள் வந்தது. மறந்தும் கூட அந்த சேனல் பக்கம் செல்லவில்லை. சமீபமாக இன்னும் நிறையப்பேர் அதுபோலவே இருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறேன். தேவதையாய் கண்ட பெண்ணை சராசரி பெண்ணாக மீண்டும் பார்க்க யார்தான் துணிவார்?  

January 15, 2017

அங்கீகாரம்

திங்கட் கிழமை காலை வேளையில் முடி திருத்தம் செய்யப் போவது

தீபாவளி, பொங்கலுக்கு புதுப் படங்கள் வெளியாவதற்கு முதல் நாள் திரையிடப்பட்டிருக்கும் ஓடித் தேய்ந்த படத்தை மதியக் காட்சி பார்ப்பது

பரபரப்பான உணவகம், தேநீர் விடுதி தவிர்த்து, அதன் அருகேயிருக்கும் ஆளரவமில்லா கடையைத் தேர்ந்தெடுப்பது

உறவிலும் நட்பிலும் பெரிய முக்கியத்துவம் பெறாதவர் விசேஷங்களுக்கு முன்னரே செல்வது
கைராசியான மருத்துவரை தவிர்ப்பது

அமாவாசை, செவ்வாய்கிழமைகளில் அசைவம் வாங்கச் செல்வது

என நீளும் என் பழக்கங்கள்

யோசித்துப் பார்த்தால் ஊரில் சிறு வயதில் எல்லோரும் விரும்பிக் குளிக்கும் படித்துறையை விட்டு ஆழமில்லா, நீர் போக்கும் குறைவான ஆற்றுக்கரையிலேயே குளித்திருக்கிறேன்.

யாரும் விரும்பிச் சேராத டியூசனில் சேர்ந்திருக்கிறேன்

அந்த வரிசையில் இப்போது ஞாயிறு அன்று பணிக்குச் செல்வதும் சேர்ந்து விட்டது

ஞாயிறன்று பணிக்கு வருபவரின் மீது எந்த மேலாளரும் கடுஞ்சொற்களை பிரயோகிப்பதில்லை

வார நாட்களில் பயமுறுத்தும் எந்த கோப்பும் ஞாயிற்றுக்கிழமைகளில் மென்மையாகவே நடந்து கொள்கிறது

குறைவாகச் சமைப்பதால் நன்றாகச் சமைக்கும் அலுவலக உணவகத்தின் சமையல்காரர் வாஞ்சையுடன் பரிமாறுவார். யாரிடமும் பகிரமுடியாமல் இருப்பவற்றை இறக்கி வைப்பார்.

மற்ற நாட்களில் எடுக்கவே அச்சமூட்டும் அலுவலகத் தொலைபேசி கூட கனிவாகவே பேசுகிறது

நேரடிப் போட்டியில் இந்த இடங்களிலெல்லாம் உனக்கு அங்கீகாரம் கிடைக்காது என்பதால்தானே இந்த பழக்கமெல்லாம்? என புத்தி கேட்கிறது

அங்கீகாரம் வேண்டா மனது மனிதனின் மனதல்லவே என பதிலளிக்கிறது மனது

December 28, 2016

பாண்டியராஜன்

1985 ஆம் ஆண்டு. பாரதிராஜா,பாலுமகேந்திரா, பாலசந்தர், பாக்கியராஜ், ஆர் சுந்தர்ராஜன் போன்று கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களும், எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர் என கதையோடு சேர்த்து நாயக நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களும் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலம். ஏன் ஸ்ரீதர், ஜெகன்னாதன் போன்ற பழம்பெரும் இயக்குநர்களும் கூட அந்த ஆண்டில் இயங்கிக்கொண்டிருந்தார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன்,விஜய்காந்த் போன்ற நடிகர்கள் ஆண்டுக்கு நான்கைந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த காலம். இந்தச் சூழலில் ஒரு புது இயக்குநர், பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் பிரபுவை நாயகனாக வைத்து ஒரு சிறிய பட்ஜெட் படம் இயக்கி வெளியிட்டார்.

அது சிறிய பட்ஜெட் படங்கள் நான்கு வாரங்கள் ஓடினால் முதல் திருப்பிக் கிடைக்கும் காலகட்டம். ஏராளமான போட்டி இருந்தும் அந்தத் திரைப்படம் பல திரையரங்குகளில் 50 நாட்களையும், சில திரையரங்குகளில் 100 நாளையும் கண்டது. அந்தப் படம் கன்னிராசி.
இயக்குநர் பாண்டியராஜன்.

இந்தப் படத்தின் பல காட்சிகள் இப்போது இணையத்தில் மீம் உருவாக்கத்திற்கு துணையாக இருக்கின்றன. இந்தப் படத்தின் காட்சிகள் அப்போது கூட இந்த அளவுக்கு சிலாகிக்கப்படவில்லை. வீட்டிற்கு வரும் தம்பியை சிறப்பாக கவனிக்கும் அக்கா, அது கண்டு புகையும் மாமா என காலத்திற்கும் நிற்கும் நகைச்சுவை காட்சியை அந்தப் படத்தில் வைத்திருந்தார் பாண்டியராஜன். தன் மகளுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் எங்கே தன் தம்பிக்கு மணமுடித்தால், அவன் இறந்து விடுவானோ என்று அஞ்சும் அக்கா, அவர்கள் திருமணத்தை தடுக்கும் எளிய கதை. அதை மிக இயல்பான காட்சிகளால் ரசிக்கும் படியாக எடுத்திருப்பார் பாண்டியராஜன்.

அதே ஆண்டில் அவர் இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்து இன்னொரு படமும் வெளிவந்தது. 30 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ஏராளமானவர்கள் சிலாகிக்கும் ஆண்பாவம் தான் அது. திருமணத்திற்குப் பெண் பார்க்கச் செல்லும் போது, தவறுதலாக வேறு பெண்ணைப் பார்ப்பதால் வரும் சிக்கல்களை நகைச்சுவையாக சொன்ன படம். இந்த இரண்டு படங்களையும் பார்த்தவர்கள் அனைவரும் இன்னொரு திறமையான இயக்குநர் தமிழ்சினிமாவுக்கு கிடைத்து விட்டார் என்றே நம்பினார்கள்.

கோபக்கார இளைஞன் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் அனைவரும் ஆர்வம் கொண்டிருந்த காலம் அது. மாற்றாக பாக்கியராஜ் சராசரி இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் சற்று அதிகமாக குறும்புத்தனத்தை கலந்து ஒரு அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்தை கொண்டுவந்தார் பாண்டியராஜன். அந்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அடுத்து பாண்டியராஜன் இயக்கிய ”மனைவி ரெடி” திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் அவரது கேரக்டரை ஆழமாக மக்கள் மனதில் பதித்தது.

எனவே தொடர்ந்து அவருக்கு நாயக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. பாண்டியராஜனும் இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். அவருக்கு ஏற்றார் போன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில் அவரை நடிப்பதற்காக புக் செய்ய வந்த ஒரு தயாரிப்பாளர், யாரை இயக்குநராகப் போடலாம் எனக் கேட்டாராம். அதற்கு பாண்டியராஜன், மணிரத்னம் இயக்கிய படங்களைப் பார்த்தேன். அவரைக் கேளுங்கள் என்றாராம். தயாரிப்பாளரும் மணிரத்னத்தை அணுகினாராம். இதை மணிரத்னம் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். என்ன காரணத்தாலோ அந்தப் படம் துவங்கவில்லை.

இடையில் பாண்டியராஜன் நடித்த சில படங்கள் சறுக்கியபோது இயக்கத்தை கையில் எடுத்தார். அப்படி எடுத்த படம் நெத்தி அடி. இந்த திரைப்படம் ஒரு வகையில் ட்ரெண்ட் செட்டர் எனலாம். அதற்கு முன்னர் தமிழ் திரைப்படங்களில் கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகளை விஸ்தாரமாக காண்பித்துள்ளார்களே தவிர, இறந்த வீடு, அதில் செய்யப்படும் சடங்குகள் பற்றி நிறைய காட்டி இருக்கமாட்டார்கள். நெத்தி அடி திரைப்படத்தில் முதல் ஒரு மணி நேரம் ஒரு இறப்பைச் சுற்றிய காட்சிகள் தான். அதுவும் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இதே பாணியை பின்னாளில் எம் மகன் திரைப்படத்தில் உபயோகித்திருந்தார்கள். மதயானை கூட்டம் படத்தில் ஏராளமான டீடெயில்களுடன் இந்தக் காட்சிகளை அமைத்திருந்தார்கள்.

இதற்குப்பின் அவர் நாயகனாக மட்டும் நடித்த படங்களும் பெரிய வெற்றியைக் கண்டன. முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கிய கதாநாயகன், கலைப்புலி சேகரன் இயக்கத்தில் வெளியான ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், ராஜசேகர் இயக்கத்தில் வெளியான பாட்டி சொல்லைத் தட்டாதே ஆகிய படங்கள் நூறுநாட்களை கடந்து வெற்றி பெறவும், பாண்டியராஜன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு நடிப்பிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார். எல்லாமே சராசரி முதலீட்டுப் படங்கள். அவை எதுவுமே பெரிய வெற்றியைக் காணவில்லை என்றாலும் சராசரியாக ஓடிய படங்கள்.

வாய்க்கொழுப்பு, புருசன் எனக்கு அரசன், பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது ஆகிய படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. இருந்தாலும் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இது குறைவே.

நெத்தி அடி இயக்கி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சுப்ரமணியசாமி படத்தை இயக்கி நடித்தார். இந்தப் படமும் சராசரியாக ஓடியது. அதற்குப்பின்னர் அவர் குருநாதர் பாக்யராஜின் கதையில் தாய்க்குலமே தாய்க்குலமே படத்தில் நடித்தார். பின்னர் கோபாலா கோபாலா திரைப்படத்தை இயக்கி நடித்தார். இதுதான் இவருடைய கடைசி பெரிய ஹிட் எனச் சொல்லலாம். அதற்கடுத்து பல படங்களில் நடித்துக் கொண்டே இடைவெளிகளில் டபுள்ஸ், கபடி கபடி ஆகிய படங்களை இயக்கினார். கடைசியாக தன் மகன் பிருத்விராஜை வைத்து கை வந்த கலை படத்தை இயக்கினார்.

ஆரம்பத்தில் பெரிய இயக்குநராக வருவார் எனக் கருதப்பட்ட பாண்டியராஜன் 10 படங்கள் கூட இயக்கவில்லை. ஆனால் 75 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். இந்த தலைமுறை அவரை ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்கும் ஒரு சிறிய நடிகர் என்றே எண்ணுகிறது. பாண்டியராஜன் இயக்கிய படங்களின் பொது அம்சம் இயல்பான நகைச்சுவை தான். ஒரு சிறிய சிக்கல் உறவுகளுக்குள் ஏற்படும். அது தீர்ந்தவுடன் சுபம். அந்த முடிச்சை அவிழ்ப்பதில் பாண்டியராஜன் தனக்கென ஒரு பாணி வைத்திருப்பார்.

பாண்டியராஜன் அப்போதிருந்த கதாநாயகர்களுடன் ஒப்பிடுகையில் உயரம் குறைவானவர். எனவே ஆக்ரோஷமான வேடங்கள் எல்லாம் செய்ய முடியாது. கதாநாயகனுக்கு உரிய முகவெட்டும் இல்லை. ஆனாலும் தைரியமாக தனக்கு ஏதுவாக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வந்தார். அதற்கு அவருக்குள் இருந்த இயக்குநர் உதவி செய்தார். கதாநாயகன் படம் மலையாள ரீமேக். அதே போல் அடிக்கடி அவர் மலையாளப் படங்களின் ரீமேக்குகளை தொடர்ந்து செய்து வந்தார். சுப்ரமணிய சுவாமி, கோபாலா கோபாலா போன்று அவர் இயக்கிய படங்களும் மலையாள ரீமேக்குகளே. தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்துகொண்டிருந்ததால் அவர் ஏதும் புதிய முயற்சியில் இறங்கவில்லை.

இயக்குநராக இருந்து நடிக்க வந்தவர்கள் என்று பார்த்தால் தமிழ்சினிமாவில் இரண்டு வகை உண்டு. மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், மனோ பாலா போல பல்வேறு காரணங்களால் படங்களை இயக்குவதை குறைத்துக் கொண்டபின் குணசித்திர வேடம், நகைச்சுவை வேடத்துக்கு தாவியவர்கள் மற்றும் பரபரப்பான இயக்குநராக இருக்கும் போது நடித்தவர்கள்.
பாக்யராஜ்,டி,ராஜேந்தர், பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோர் இந்த வகையில் வருவார்கள். முதல் இரண்டு பேர்களும் தாங்கள் உச்சத்தில் இருந்தபோது அடுத்த இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. பாக்யராஜ் மட்டும் நட்புக்காக நான் சிகப்பு மனிதன், அன்புள்ள ரஜினிகாந்த், விதி போன்ற சில படங்களில் தலைகாட்டினார். டி ராஜேந்தர் இப்பொழுதுதான் கே வி ஆன்ந்த் படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். பாண்டியராஜனும், பார்த்திபனும் தான் இரண்டு படங்கள் இயக்கிய உடனேயே நடிகராக மாறிவிட்டார்கள்.

இப்படி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கவும் செய்த பாக்யராஜ், டி.ராஜேந்தர் படங்களிலும் உறவுச்சிக்கல்கள் தான் அடிநாதமாக இருக்கும் என்றாலும், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டுபோய் தீர்ப்பார்கள். ஆனால் பாண்டியராஜன் படங்களில் அதை எளிதாக தீர்ப்பார்கள். பாண்டியராஜனின் பாணி என்பது குசும்புத்தனம் கொண்ட, பயந்த சுபாவம் உள்ள நல்லவன் கேரக்டர். இதைத்தான் தான் இயக்கிய படங்களிலும், நடித்த படங்களிலும் அவர் கடைப்பிடித்தார். பாக்யராஜும் கிட்டத்தட்ட இதே பாணிதான் என்றாலும் இருவருக்கும் இடையே சிறு வேற்றுமை உண்டு. பாக்யராஜின் கேரக்டரில் எமோஷனல் அதிகம் வெளிப்படும். ஆனால் பாண்டியராஜனின் கேரக்டரில் அந்தளவு எமோசனல் இருக்காது. இவர்களுக்கு நேர் எதிரியாக டி.ராஜேந்தர் எமோஷனல் மட்டுமே இருக்கும். பார்த்திபன் சில படங்களுக்கு பிறகு இயல்புத்தன்மை குறைந்து பேண்டஸியும் சற்று கலக்க ஆரம்பித்தார்.

இயக்கத்தின் ஆரம்ப கால கட்டத்திலேயே பாண்டியராஜனும், பார்த்திபனும் நடிக்க வந்துவிட்டதால் அவர்களின் ஆரம்ப படங்களைப் போல பின்னாட்களில் இயக்கிய படங்களில் முத்திரை பதிக்க இயலவில்லை. ஆனால் பாக்யராஜும், டி ராஜேந்தரும் நிறைய வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்தார்கள். இயக்கம் என்பது நடிப்பை விட பல மடங்கு உழைப்பைக் கோரும் வேலை. நடிகராக ஒப்பீட்டளவில் எளிதான வேலையைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் இயக்கத்துக்கு திரும்பி வரும்போது பெரிய வெற்றிகளைப் பார்ப்பதில்லை. இதற்கு பாண்டியராஜன் வாழும் எடுத்துக்காட்டு. அவரது முதல் இரண்டு படங்கள் 30 ஆண்டுகள் கழித்தும் இப்போதைய இளைய தலைமுறையினரால் கொண்டாடப் பட்டு வருகின்றன. நெத்தி அடி படம் கூட முதல் பாதி வரை மிக நன்றாக இருக்கும். ஆனால் பாண்டியராஜனின் சிக்கல்களை தீர்க்கும் எளிய பாணியில் இல்லாமல் பேண்டஸியாக சிக்கலைத் தீர்க்கும் பிற்பகுதியை வைத்திருப்பார். அதனால் பலராலும் நினைவு கூறப்படவேண்டிய அந்தத் திரைப்படம் பெரிய அளவில் மக்களைச் சென்றடையவில்லை. இடையில் அவர் நடிக்கப் போகாமல் இருந்திருந்தால் அந்தப் பகுதிகளை நன்கு மெருகேற்றியிருப்பார்.

நடிப்பிலும் அவருக்கு நல்ல வாய்ப்புகள் 1988-89ல் அமைந்தது. கதாநாயகன், ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், பாட்டி சொல்லைத் தட்டாதே எல்லாம் எல்லா செண்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிய படங்கள். அந்தப் படங்களுக்கு பாண்டியராஜனின் குறும்புத்தனம் கொண்ட அப்பாவி இளைஞன் இமேஜ் பெரிதும் கைகொடுத்தது. ஆனால் அவரால் தொடர்ந்து அம்மாதிரி வெற்றிகளைக் கொடுக்க முடியவில்லை.

பாண்டியராஜனிடம் இருந்த இன்னொரு குறைபாடு அவர் நடித்த எல்லாத் திரைப்படங்களிலும் அவர் பாண்டியராஜனாகத்தான் தெரிந்தார். உடல் மொழியிலோ, உச்சரிப்பிலோ எந்த வித மாறுபாடும் காட்டியதில்லை. எனவே தான் பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் 2000க்குப் பின் அவருக்கு நாயக வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த மாதிரி கதைகளை நடிக்க அடுத்த செட் நடிகர்கள் வந்துவிட்டார்கள்.

குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் கருணாஸ், அவர் பாண்டியராஜன் பாணி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளை புரம் ஆகிய படங்கள் எல்லாமே பாண்டியராஜன் பட சட்டகத்தில் அமைந்தவைதான். கருணாஸும் மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து சில வெற்றிகளைப் பார்த்தார்.
இயல்பான கதாபாத்திரங்கள், குறும்புத்தனமான வசனங்கள் கொண்டு மக்களை மகிழ்விக்கும் நல் உணர்வுப்படங்களை தொடர்ந்து கொடுத்திருக்க வேண்டிய பாண்டியராஜன் நடிப்பின் பக்கம் சென்றது தமிழ்திரைக்கு ஒரு இழப்பே.